தர்மபுரி அருகே ஏ.டி.எம். மையங்களுக்கு வேனில் எடுத்து வரப்பட்ட ரூ.5¼ கோடி பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
தர்மபுரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது, ஏ.டி.எம். மையங்களுக்கு வேனில் எடுத்து வரப்பட்ட ரூ.5¼ கோடி சிக்கியது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சேஷம்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகனப்பிரியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுத்து செல்லும் ஏஜென்சியை சேர்ந்த ஒரு வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி பறக்கும் படை குழுவினர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வேனுக்குள் இருந்த பெட்டியில் 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ரூ.5 கோடியே 32 லட்சம் அந்த வேனில் இருந்தது. இதுதொடர்பாக அந்த வேனில் வந்த தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சின்னாமிட்டாஅள்ளியை சேர்ந்த மாதையன், பென்னாகரம் அருகே உள்ள திண்ணூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி ஆகிய 2 பேரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதில், அவர்கள் தனியார் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் என்று தெரியவந்தது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து அந்த பணத்தை எடுத்து வருவதாகவும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் நிரப்புவதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பணத்தை எடுத்து செல்வதற்குரிய ஆவணங்களை பறக்கும் படை குழுவினர் கேட்டனர். அப்போது சில ஆவணங்களின் நகல்களை 2 பேரும் கொடுத்தனர். அவை முறையான ஆவணங்கள் தானா? என்ற சந்தேகம் பறக்கும் படை குழுவினருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தர்மபுரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு தாசில்தார் ராதா கிருஷ்ணன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பணத்தை எடுத்து வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். வேனில் கொண்டு வரப்பட்ட பணத்திற்குரிய முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். அதன் பிறகு அந்த பணம் தர்மபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பறக்கும் படை சோதனையில் ரூ.5 கோடியே 32 லட்சம் சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் வேனில் வந்த மாதையன், சின்னசாமி ஆகியோரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடியே 47 லட்சம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிக்கியது. இந்த நிலையில் வங்கிகளுக்கு பணம் நிரப்பும் வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடியே 32 லட்சம் பணம் முறையான ஆவணங்கள் இல்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகனசோதனைகளில் இவ்வளவு அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முறையான விசாரணைக்கு பின்னரே, அந்த பணம் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப எடுத்து செல்லப்பட்டதா? அல்லது முறைகேடாக எடுத்து செல்லப்பட்டதா? என்பது உறுதியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story