கன்னியாகுமரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


கன்னியாகுமரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 6 April 2019 4:00 AM IST (Updated: 6 April 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 1,694 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குமரி மாவட்டத்துக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகன்யா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களோடு சேர்த்து ஒரு நோட்டா என மொத்தம் 16 பட்டன்கள் தேவைப்படும். இதற்காக ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் போதுமானது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி தொகுதியில் தற்போது வரையிலும் 3708 அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன. தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் போன்றவற்றை தடுக்க மொத்தம் 54 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படை சோதனை மூலம் 2.16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 64 லட்சம் ரூபாய் வணிக வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு திரும்ப வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் 2 இடங்களில் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அனுமதியின்றி கொடி கட்டியிருந்த 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயிற்சி நாளை (அதாவது இன்று) நடைபெற இருக்கிறது. தேர்தல் பணிக்காக 8552 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பயிற்சியில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது 134 விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் குமரி மாவட்டத்தில் அனைத்து பணியாளர்களும் ஒத்துழைக்கிறார்கள்.

வருகிற 16-ந் தேதி மாலை 5 மணி வரை அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய லாம். அதைத் தொடர்ந்து 17-ந் தேதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் கடந்த முறை 74 சதவீத வாக்குப்பதிவு இருந்த போது குமரி மாவட்டத்தில் மட்டும் வாக்குப்பதிவு சதவீதம் மிகக்குறைவாக இருந்தது. கல்வியில் மிகுந்த மாவட்ட மக்கள் வாக்களிப்பில் குறைவாக இருக்கிறார் கள். கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 1,694 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 591 வாக்குச்சாவடிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் பதிவானதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களிடம் தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் வர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story