தபால் நிலையத்தில் டெபாசிட் பணம் 15 லட்சம் கையாடல்: தபால்காரர் –நிலைய அலுவலர் பணி இடைநீக்கம்
வெட்டயன்கிணறு தபால் நிலையத்தில் டெபாசிட் பணம் 15 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தபால்காரர், நிலைய அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பெருந்துறை,
பெருந்துறை ஒன்றியம், திங்களூர் அருகே வெட்டயன்கிணறு கிராமத்தில் தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வெட்டயன்கிணறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு, குறித்த கால டெபாசிட், நீண்ட கால டெபாசிட், தொடர் சேமிப்பு கணக்கு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் ஆகியவற்றில் 1,428 கணக்குகளை தொடங்கி பணம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கணக்குகள் மோசடி செய்யப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணக்கு வைத்திருப்பவர்கள் திங்களூர் தபால் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுபற்றி அறிந்த ஈரோடு மாவட்ட தலைமை தபால் அலுவலக மேற்பார்வையாளர்கள் ஜெயசீலன், சேதுமாதவன், பட்டாபிராமன் மற்றும் குறைதீர்க்கும் அலுவலர் லாவண்யா ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் வெட்டயன்கிணறு தபால் நிலைய சேமிப்பு கணக்கு மற்றும் இதர கணக்குகளை ஆய்வு செய்து வந்தனர். கடந்த ஒரு வாரத்தில், 242 கணக்குகளை சரிபார்த்தனர். இதில் 75 கணக்குகளில், ரூ.15 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் கையாடல் மற்றும் மோசடி செய்த, வெட்டயன்கிணறு தபால் நிலைய அலுவலர் பஞ்சையன் மற்றும் தபால்காரர் செல்வராஜ் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மீதமுள்ள 1,186 சேமிப்பு கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கணக்குகளில், இன்னும் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது? என்பது ஆய்வு முடிந்த பிறகு தான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.