தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் உற்சாக குளியல் போட்ட காட்டு யானைகள்


தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் உற்சாக குளியல் போட்ட காட்டு யானைகள்
x
தினத்தந்தி 6 April 2019 4:00 AM IST (Updated: 6 April 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாம ஏரியில் யானைகள் உற்சாக குளியல் போட்டன.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் பகல் நேரத்தில் வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள்ளும் புகுந்து அங்கு பயிரிட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

தற்போது தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள சாம ஏரிக்கு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று 5-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் தண்ணீர் தேடி சாம ஏரிக்கு வந்தன. இதையொட்டி அந்த யானைகள் ஏரியில் இறங்கி தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து கொண்டன. மேலும் அவைகள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி ஒன்றன் மீது ஒன்று அடித்து விளையாடின.

சிறிது நேரம் உற்சாக குளியல் போட்ட இந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இதற்கிடையே யானைகள் ஏரியில் உற்சாக குளியல் போட்டதை அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பார்த்து ரசித்தனர். இளைஞர்கள் சிலர் ஆர்வம் மிகுதியால் ஏரியின் அருகில் சென்று தங்கள் செல்போனில் யானைகளை படம் பிடித்தனர்.

வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி சாம ஏரிக்கு வருகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகளை பொதுமக்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story