தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விவசாயம் பாதிப்பு நல்லசாமி பேட்டி


தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விவசாயம் பாதிப்பு நல்லசாமி பேட்டி
x
தினத்தந்தி 6 April 2019 4:30 AM IST (Updated: 6 April 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கள் நல்லசாமி கூறினார்.

தாராபுரம்,

தாராபுரத்தில் கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கி பேசினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. கட்சித்தலைவர்களின் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அடையாளம் தெரியாத ஆட்களுக்கு மதுபானமும், கோழி பிரியாணியும் கொடுப்பதோடு பணமும் கொடுத்து வாகனங்களில் அழைத்து செல்கிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.

பொதுக்கூட்ட மேடைக்கு தலைவர்கள் வருவதற்கு தாமதம் ஆனால், கூட்டத்திற்கு வந்தவர்களை குதூகலப்படுத்த இளம்பெண்களையும், ஆண்களையும் வைத்து குத்தாட்டம் நடத்துகிறார்கள். இந்த செலவுகளை தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்குமா? சேர்க்காதா? என்பது தெரியவில்லை. இளம்பெண்களை வைத்து பட்டப்பகலில் நடத்தப்படும் ஆபாச குத்தாட்டங்கள் தான், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவங்களை போன்ற பல சம்பவங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. இதற்கு யார் தடை விதிப்பது?

கள் உணவுப்பொருள். அது தடைசெய்யப்பட வேண்டிய போதைப்பொருள் அல்ல. கள் இறக்குவதும் பருகுவதும் அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. சசிபெருமாள் இறந்தபோது, அவருக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் கள்ளுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

அதற்கு நாங்கள் கள் உணவுப் பொருள்தான் என்பதை இப்போதே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினோம். அதை வைகோ ஏற்றுக்கொள்ளவில்லை. ம.தி.மு.க.வினர் கள் உணவுப்பொருள் அல்ல என்று எங்களோடு வாதாடி வெற்றி பெற்றால், அவர்களுக்கு 10 கோடி ரூபாயை பரிசாக தருவதோடு, கள் இயக்கத்தையும் கலைத்துவிடுகிறோம்.

அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு, கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களை, ஒட்டுமொத்தமாக அழைத்துச் செல்வதால், விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மஞ்சள், சின்ன வெங்காயம் போன்றவை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story