முட்டை ஓட்டின் தரத்தை உயர்த்த கோழித்தீவனத்தில் சோடா உப்பு, ‘வைட்டமின்-சி’ சேர்க்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
முட்டை ஓட்டின் தரத்தை உயர்த்த கோழித்தீவனத்தில் சோடா உப்பு மற்றும் ‘வைட்டமின்-சி’ ஆகியவற்றை சேர்த்து வர வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
அடுத்த 4 நாட்கள் வானம் சற்றே மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 104 டிகிரியாகவும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 9-ந் தேதி 102.2 டிகிரியாகவும் இருக்கும். குறைந்தபட்சமாக அடுத்த 4 நாட்களுக்கு 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் பகல் வெப்பம் தொடர்ந்து 104 டிகிரி அளவில் நீடிக்கும் என்றாலும், அதிக காற்றின் வேகத்தால் மாலை நேரங்களில் வெப்ப அளவு குறையக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதே போல் இரவிலும் வெப்ப அளவு 73.4 டிகிரி அளவிலேயே காணப்படும்.
இம்மாத 2-ம் மற்றும் 3-ம் வாரங்களில், அதிக மேக கூட்டங்கள் உருவாகி இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதுவரை வெப்ப அயற்சியும், வெப்ப அதிர்ச்சியும் கோழிகளில் காணப்படும். முட்டை ஓட்டின் தரத்தை உயர்த்தி கொள்ளும் விதமாக தீவனத்தில் சோடா உப்பு மற்றும் ‘வைட்டமின்-சி’ ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து வர வேண்டும்.
கடந்்த வாரம் கோழி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நாட்டுக்கோழிகளில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தாய்க்்கோழிகள் மற்றும் கோழிகுஞ்சுகளுக்கு அம்மை தடுப்பூசி போடுமாறும் அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story