கோவில்பட்டி வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரி ஆய்வு
கோவில்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.
கோவில்பட்டி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக, தொழில்துறை ஆணையர் ராஜேந்திரகுமார் நேற்று காலையில் கோவில்பட்டிக்கு வந்தார்.
அவர், கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி, கிளவிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் சென்று பார்வையிட்டார். அங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வந்து செல்லும் வகையில், சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.
மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று தொழில் துறை ஆணையர் ராஜேந்திரகுமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, கோவில்பட்டி தாசில்தார் பரமசிவன், தேர்தல் பார்வையாளரின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரேமா, அபிராமசுந்தரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story