சேரன்மாதேவி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பு
சேரன்மாதேவி பகுதியில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேரன்மாதேவி,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை அவர் உலகன்குளம், கரிசல்பட்டி, திருவிருத்தான்புள்ளி, புலவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை கோபாலசமுத்திரம், பத்தமடை, கரிசூழ்ந்த மங்கலம், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் ஞான திரவியம் பேசியதாவது:-
விவசாயிகள் நலன் காத்திட, விவசாய கடன் தள்ளுபடி செய்திட, ஜூன் 1-ந் தேதி கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்திட நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் உதய சூரியன். மத்தியில் நல்லாட்சி அமைய ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும். எனவே நீங்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். பீடி சுற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள், விவசாயிகளுக்கு உதவிகள், ரேஷன் கடை போன்ற அடிப்படை வசதிகளுக்கு தி.மு.க.விற்கு வாக்களியுங்கள். நான் வெற்றி பெற்றால் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்த நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்எல்.ஏ வேல்துரை, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரத்தினம், நகர செயலாளர் சுடலையாண்டி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வேல்முருகன், சேரன்மாதேவி நகர பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் பழனி, வக்கீல்கள் ராஜகோபால், குத்தாலிங்கம், செந்தில் கருணாநிதி, சேரன்மாதேவி மாணவர் அணி அமைப்பாளர் நம்பிராஜன், சுபாஷ், பிரேம் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளையில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வாக்கு சேகரித்தார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், மாவட்ட அவை தலைவர் அப்பாவு, நெல்லை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கான்ஸ்டைடன் ரவீந்திரன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் கிரகாம்பெல், ஜோசப் பெல்சி ஆகியோரும் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story