திருமணமான 8 மாதத்தில் மனைவி அடித்துக்கொலை தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவர் கைது


திருமணமான 8 மாதத்தில் மனைவி அடித்துக்கொலை தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவர் கைது
x
தினத்தந்தி 6 April 2019 4:00 AM IST (Updated: 6 April 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 8 மாதத்தில் மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம், காந்தி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 27). இவருடைய மனைவி விக்னேஷ்வரி(24). இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் படுக்கை அறையில் விக்னேஷ்வரி தூக்கில் பிணமாக தொங்கினார். வீட்டில் விக்னேஷ்வரி கைப்பட எழுதிய கடிதமும் சிக்கியது. இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

அதில், திருமணமான நாள் முதல் மாரியப்பன், கூடுதல் வரதட்சணை கேட்டு விக்னேஷ்வரியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தது தெரிந்தது. சம்பவத்தன்றும், வரதட்சணை கேட்டு அடித்து உதைத்ததில் விக்னேஷ்வரி உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாரியப்பன், அவரை கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசாரிடம் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மனைவியை அடித்துக்கொன்றதாக மாரியப்பனை நேற்று சேலையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story