உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.25 லட்சம் பறிமுதல் வாலிபரிடம் போலீஸ் விசாரணை


உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.25 லட்சம் பறிமுதல் வாலிபரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 April 2019 9:22 PM GMT (Updated: 2019-04-06T02:52:09+05:30)

ஒலேநரசிப்புரா டவுனில், மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.25 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹாசன்,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க பறக்கும் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும், முக்கிய இடங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் அம்பேத்கர் படாவனே அருகே ஹள்ளிமைசூரு சாலையில் போலீசாரும், பறக்கும் படை அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லை

அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் ஒரு பணப்பை இருந்தது. போலீசாரும், பறக்கும் படை அதிகாரிகளும் சோதனையிடுவதை பார்த்த அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு வேகமாக சென்றார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் தங்களுடைய ரோந்து வாகனங்களில் அந்த வாலிபரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவரிடம் இருந்த பணப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.25 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அந்த வாலிபரிடம் இல்லை.

ரூ.25 லட்சம் பறிமுதல்

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் இருந்த ரூ.25 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்து வருகிறார்கள்.

Next Story