மைசூருவில் கூட்டணி வேட்பாளர் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல மந்திரி ஜி.டி.தேவேகவுடா கருத்து; காங்கிரசார் அதிர்ச்சி
கடமை என்பதால் தேர்தலில் பணியாற்றுகிறோம் என்றும், மைசூருவில் கூட்டணி வேட்பாளர் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறியுள்ளார். இந்த கருத்தால் காங்கிரசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மைசூரு,
கர்நாடகத்தில் இரு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இதில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் ஹாசன், மண்டியா, துமகூரு, மைசூரு-குடகு ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளுமே சமபலத்துடன் திகழ்கிறது. ஆனால் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஹாசன், துமகூரு, மண்டியா தொகுதிகளை ஒதுக்கியதால் காங்கிரசாரும், காங்கிரசுக்கு மைசூரு தொகுதிைய ஒதுக்கியதால் ஜனதாதளம்(எஸ்) கட்சியினரும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.
இரு கட்சியினரும் இணைந்து பிரசாரம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள். அத்துடன் இரு கட்சியினர் இடையேயும் மோதலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படுமோ என்று இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
தேவேகவுடா விரக்தி
நேற்று முன்தினம் மண்டியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, சித்தராமையா பேசினாலும் மண்டியாவில் கருத்துவேறுபாடுகள் சரியாகாது என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
அதுபோல் ஹாசன், மைசூரு-குடகு, துமகூரு மாவட்டங்களிலும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த தொகுதியில் உள்ள இரு கட்சி தலைவர்களும் கடும் தலைவலியை சந்தித்து வருகிறார்கள்.
தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல
இந்த நிலையில் மைசூருவில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவரும், மாநில உயர்கல்வித் துறை மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் கூட்டணி தர்மம், ஜனதாதளம்(எஸ்) கட்சி மேலிடத்தின் படி மைசூரு-குடகு தொகுதி கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறோம். அது எங்களது கடமை. அந்த கடமைக்காக தேர்தலில் பணியாற்றுகிறோம். அதையும் மீறி கூட்டணி கட்சி வேட்பாளர் தேர்தலில் தோல்வி அடைந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அந்த பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இன்றைய நிலையில் இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் நல்ல புரிதல் இல்லை. இரு கட்சியினர் இடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை கூட்டணி வேட்பாளர் தோற்றால், இதற்கு நானும், மந்திரி சா.ரா.மகேசும் பொறுப்பு ஏற்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசார் அதிர்ச்சி
கடமைக்காக தேர்தல் பணியாற்றுவதாகவும், கூட்டணி வேட்பாளர் ேதாற்றால் நாங்கள் பொறுப்பல்ல என்று கூறிய மந்திரி ஜி.டி.தேவேகவுடாவின் கருத்தால், காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story