எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேச்சு


எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 4:15 AM IST (Updated: 6 April 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேசினார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொது மக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டார். அப்போது அவர் பெரியகடை வீதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிற்கு ஆதரவு கேட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:– எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும். அதுபோல் பதவி வரும் போது, பணிவும் வேண்டும், துணிவும் வேண்டும். எச்.ராஜா, கேப்டன் விஜயகாந்தை போல் தைரியமானவர். அவர் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். தைரியமாக பேசுபவர்களிடம் உண்மை இருக்கும்.

இந்தக் கூட்டணியில் எந்த குறையும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது, மேலும் சவாலை எதிர்க்கக் கூடிய வல்லமையும் இந்த கூட்டணிக்கு உள்ளது. பதவியோடும், பணிவோடும், தொகுதியையும், அதன் மக்களையும் காப்பாற்ற கூடிய நல்ல வல்லமையானவருக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும். இந்த தொகுதியில் எச்.ராஜாவை சரித்திர வெற்றியாளராக ஆக்க வேண்டும்.

உழைக்க தயாராக உள்ள வேட்பாளருக்கு உங்கள் வாக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த முறை பிரேமலதா கூட்டத்தினரை பார்த்து, எங்கள் கூட்டணி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டளிப்பீர்களா, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா, சிவகங்கை தொகுதியில் தாமரை வென்றது என்ற சரித்திரத்தை படைப்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு கூட்டத்தினர் ஆதரவாக பதில் கூறினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். ஒன்றிய செயலாளர் வாசு, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், தே.மு.தி.க. தனசேகரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story