நாடாளுமன்ற தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,916 வாக்குச்சாவடி மையங்கள் கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
நாடாளுமன்ற தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,916 வாக்குச்சாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை எட்டும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் அமைத்தல், இருசக்கர வாகன பேரணி, மனித சங்கிலி நடத்துதல், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையேற்று 100 சதவீத வாக்குப்பதிவு, வாக்குரிமை விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தும் வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டினார்.
அதனை தொடர்ந்து வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வருகை தந்திருந்த பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்பு பொதுமக்கள் அனைவரும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதன் பின்பு மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலுக்காக 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தலில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்கள் ஆகியவற்றை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் கண்காணிப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தில் இதுவரை 2,764 அழைப்புகள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறக்கும்படை மற்றும் நிலைத்த கண்காணிப்புக்குழுவினர் மேற்கொண்ட வாகன தணிக்கை மூலம் இதுவரை 243 இடங்களில் ரூ.3 கோடியே 9 லட்சம் அளவில் முறையான ஆவணமின்றி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கியின் அலுவலர் சங்கரன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் சுப்பையா, கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா, மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை அலுவலர் கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.