மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்ப ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வந்துள்ளது உதயநிதி ஸ்டாலின் பேச்சு


மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்ப ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வந்துள்ளது உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-06T04:08:34+05:30)

மத்திய–மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்ப ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் வாய்ப்பு தற்போது மக்களுக்கு வந்துள்ளது என தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ராஜபாளையம்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூரையும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கோசுகுண்டு சீனிவாசனையும் ஆதரித்து மீனம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து அவர் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெரு பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:–

வர இருக்கும் தேர்தலுக்கு பின்னர் மத்தியில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் தி.மு.க.வும் ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலின் கதாநாயகனே தி.மு.க. தேர்தல் அறிக்கை தான். ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் வாய்ப்பு தற்போது மக்களுக்கு கிடைத்து இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்லாமல், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலையும் அதிகமாக வீசுகிறது. மோடி கடந்த தேர்தலில் ஒவ்வொரு நபரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் பத்து பைசா கூட செலுத்தவில்லை. மேலும் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்று ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தையும் பறித்துக்கொண்டார். அனைவரும் தூங்கும்நேரத்தில் ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பேன் என அறிவித்தார். அதை நிறைவேற்றினாரா?

நீட் தேர்வை கொண்டு வந்ததால், மாணவி அனிதா உயிரிழந்தார். எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்டும் நாள்தான், வருகிற 18–ந்தேதி.

தூத்துக்குடியில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் பட்டப்பகலில் பலரை காக்கா, குருவி சுடுவது போல் சுட்டு தள்ளினர். அதற்கு எல்லாம் ஆட்சியாளர்கள் பதில் சொல்லியாக வேண்டிய தேர்தல் இது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை, பெட்ரோல்–டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை என முக்கியமான வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று நிரூபித்து காட்டியவர் கருணாநிதி. அவரது வழியில் ஸ்டாலினும் வாக்குறுதிகள் அனைத்தையும் கட்டாயம் நிறைவேற்றுவார். அதேபோல ராகுல்காந்தி அறிவித்த குடும்பத்திற்கு மாதம் 6 ஆயிரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

சாத்தூர் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் அவரை சென்று பார்க்க முடியவில்லை. மருத்துவர் பேட்டி அளிக்க வில்லை. ஒரு கட்சியின் தலைவரான அவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்களுக்கு எவ்வாறு அக்கட்சியினர் பாதுகாப்பு அளிப்பார்கள்? தலைவர் ஸ்டாலின் சொன்னது போல தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


Next Story