விவசாயிகளை மோடி கண்டுகொள்ளவில்லை பிருந்தாகாரத் குற்றச்சாட்டு
விவசாயிகளை மோடி கண்டுகொள்ளவில்லை என மதுரையில் பிருந்தாகாரத் கூறினார்.
மதுரை,
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து யா.ஒத்தக்கடை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கலந்து கொண்டு பேசியதாவது:–
கஜா புயல் தமிழகத்தை தாக்கியபோது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவில்லை. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற அணிகள் ஒரு பக்கம் நிற்கின்றன. அரசியல் சட்டத்தை சிதைக்கக்கூடியவர்கள் மற்றொருபுறத்தில் நிற்கின்றனர். மதச் சார்பின்மையை பாதுகாப்பவர்கள் ஒரு புறமும், பாசிச கும்பல் மற்றொரு புறத்திலும் நிற்கிறது.
இந்தியாவைப் பாதுகாக்க, தமிழகத்தை பாதுகாக்க, பாசிச கும்பலைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற அணிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தியா ஒரு ஏழ்மையான நாடு. 90 சதவீத மக்கள் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றுவருகின்றனர். விவசாயத்தை நம்பியுள்ள நாடு இந்தியா. விவசாயம் இல்லையென்றால் நாடே அழிந்துவிடும். விவசாயிகளை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் ஆண்டிற்கு 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த 5 ஆண்டில் ஏழை பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. 73 சதவீத சொத்துகளை ஒரு சதவீத பணக்காரர்கள் வைத்துள்ளார். இந்த அரசு கார்பரேட்டுகளுக்கான அரசாகவே இருந்துள்ளது. ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய பணமில்லை என்கிறது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் வெட்கக்கேடானது. மோசமானது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தமிழக அரசு பாதுகாக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குரல் கொடுத்து வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் ஒரு மணி நேரத்திற்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். விஷத்தன்மை கொண்ட பா.ஜ.க.–ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தையும் அவர்களோடு தமிழகத்தில் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு பிருந்தாகாரத் பேசினார்.