சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மராட்டியத்தில் அனல் பறக்கும் பிரசாரம் வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு
மராட்டியத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மும்முரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் பிரசாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
நேரடி போட்டி
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன.
இதேபோல் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வாஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியும் போட்டியிடுகின்றன.
ஆனால் பா.ஜனதா- சிவசேனா மற்றும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
சூறாவளி சுற்றுப்பயணம்
முதல் கட்டமாக 11-ந்தேதி 7 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இங்கு வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மராட்டியத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வார்தாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கடந்த 2 நாட்களாக மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றி சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அனல் பறக்கும் பிரசாரம்
மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, மாநில மந்திரிகள் அனல் பிறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் நாடுமுழுவதும் இருந்து பா.ஜனதா மூத்த தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக மராட்டியத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மராட்டியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாக பா.ஜனதா தெரிவித்தது.
இன்று மோடி பிரசாரம்
இன்று (சனிக்கிழமை) நாந்தெட் தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
மற்றொரு புறத்தில் ஆளும் கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று நாக்பூரில் பிரசாரம் செய்தார். இதேபோல் வாஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் கூட்டணி சார்பில் பிரகாஷ் அம்பேத்கரும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
மும்பை தொகுதிகள்
நிதி தலைநகரான மும்பையில் உள்ள தொகுதிகளை கைப்பற்றுவதில் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்குள்ள 6 தொகுதிகள் உள்பட 17 தொகுதிகளில் வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கும் தேர்தல் நெருங்கி வருவதால், மும்பையை நோக்கி இன்னும் சில நாட்களில் தலைவர்கள் படையெடுக்க உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை உத்தரபிரதேசத்துக்கு அடுத்தப்படியாக மராட்டியத்தில் தான் அதிக தொகுதிகள் உள்ளன. இதனால் மராட்டியத்தை குறி வைத்து தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story