100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி - ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது


100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி - ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது
x
தினத்தந்தி 6 April 2019 4:34 AM IST (Updated: 6 April 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.

தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலோடு தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாகவும், உண்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக வாக்காளரிடம் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. ராட்சத பலூனை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அண்ணாதுரை பறக்கவிட்டார்.

பின்பு தஞ்சை மருத்துவக்கல்லூரியில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் அண்ணாதுரை, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.

தொடர்ந்து வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது. வாக்கு விற்பனைக்கு அல்ல ஆகியவை குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. பின்னர் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர், மாணவ-மாணவிகளின் இருசக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டது. மேலும் தவறாமை என குறிப்பிடும் வகையில் ஒற்றை விரல் வடிவில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, அதை சுற்றி டாக்டர்களும், மாணவர்களும் வரிசையாக நின்றனர்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சொக்கலிங்கம், தாசில்தார்கள் அருணகிரி, மாலதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story