கொடைக்கானல் அருகே வனப்பகுதி, பட்டா நிலங்களில் பயங்கர தீ - அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்


கொடைக்கானல் அருகே வனப்பகுதி, பட்டா நிலங்களில் பயங்கர தீ - அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
x
தினத்தந்தி 5 April 2019 10:45 PM GMT (Updated: 5 April 2019 11:04 PM GMT)

கொடைக்கானல் அருகே வனப்பகுதி, பட்டா நிலங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் மலைப்பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மரங்கள் கருகி வருகின்றன. இதன் காரணமாக பட்டா நிலங்கள், வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதனை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் போராடி வருகின்றனர். இதனிடையே நேற்று பிற்பகலில் வத்தலக்குண்டுவுக்கு செல்லும் பிரதான சாலையில் பெருமாள் மலை அருகே உள்ள வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுமட்டுமின்றி அடுக்கம் பிரிவு பகுதிகளிலும் உள்ள வனத்துறைக்கு சொந்தமான நிலங்களிலும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ பற்றி எரிந்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. இதையடுத்து வனத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இங்குள்ள வனவிலங்குகள் இடம்பெயர்ந்து கிராமங்களுக்குள் புகுந்து விடும் சூழ்நிலை உள்ளது. அத்துடன் புகை மண்டலமும் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து அறிந்து அதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Next Story