தேனி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சாலை மறியல்
தேனியில் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்யக்கோரி, கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சாலை மறியல் செய்தனர்.
தேனி,
தேனி லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருபவர் புகழேந்தி. இவர் ஒரு வழக்கில் ஆஜராகி விட்டு கோர்ட்டில் இருந்து வெளியே வரும்போது அல்லிநகரத்தை சேர்ந்த சின்னச்சாமி, முத்துதேவன்பட்டியை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் அவரை தரக்குறைவாக பேசி எங்களுக்கு எதிராக செயல்பட்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்தனர். இது குறித்து புகழேந்தி தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். பின்னர் கோர்ட்டு முன்பு தேனி வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் வக்கீல்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலுக்கான காரணம் குறித்து வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கத்திடம் கேட்டபோது, ‘தேனியை சேர்ந்த வக்கீல் புகழேந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சின்னச்சாமி, முருகன் என்ற 2 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை கைது செய்யாமல் போலீசார் தாமதம் செய்து வருகின்றனர். இதனால், கோர்ட்டு புறக்கணிப்பு செய்து மறியலில் ஈடுபட்டு உள்ளோம். மிரட்டல் விடுத்த 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம்’ என்றார்.
மறியல் குறித்து தகவல் அறிந்ததும், தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் அங்கு வந்து வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தலைமறைவாக உள்ள 2 பேரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து வக்கீல்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story