ஜெயலலிதாவின் ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு


ஜெயலலிதாவின் ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 6 April 2019 7:39 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

செய்யாறு,

செய்யாறு சட்டமன்ற தொகுதியில், ஆரணி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வி.ஏழுமலையை ஆதரித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பல்லி, பெருங்களத்தூர், சிறுவேளியநல்லூர், வளர்புரம், காழியூர், நெடும்பிறை உள்ளிட்ட 42 கிராமங்களிலும், செய்யாறு டவுன் கொடநகர், வெங்கட்ராயன்பேட்டை, கன்னியம்நகர் மற்றும் ஆரணி கூட்ரோடு பகுதியில் பொதுமக்களை சந்தித்து மத்திய, மாநில அரசின் சாதனைகளை எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற செஞ்சி வி.ஏழுமலைக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

பிரசாரத்தின் போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் மக்களுக்கான திட்டங்களை அறிவித்து முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்படுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து செஞ்சி வி.ஏழுமலையை வெற்றி பெற செய்திட வேண்டும்’ என்றார்.

செய்யாறு ஒன்றியம், சிறுவேளியநல்லூர் கிராமத்தில் செஞ்சி வி.ஏழுமலை, பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ஜெயலலிதாவின் மறைவால் நீங்கள் எந்தளவிற்கு துயரத்தால் பாதிக்கப்பட்டீர்களோ, அதைவிட எங்களுக்கு மீளா துயரத்தில் ஆழ்த்தியது என கண்கலங்கி பேசினார். அப்போது அங்கிருந்த பா.ஜ.க. நிர்வாகி ஆர்.மோகனம், அவரை முதுகில் தட்டி கொடுத்து சமாதானம் செய்தார். மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி தொடரவும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திடவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

பெருங்களத்தூரில் வேட்பாளர் செஞ்சி வி.ஏழுமலை பிரசாரத்தில் ஈடுபட்ட போது ஜெயச்சந்திரன் – சாவித்ரி தம்பதியரின் ஒரு மாத பெண் குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டினார்.

பிரசாரத்தின் போது அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் எஸ்.ரவிச்சந்திரன், பி.லோகநாதன், அருணகிரி, ஜனார்த்தனம், கே.வெங்கடேசன், எம்.மகேந்திரன், எஸ்.கார்த்திகேயன், டி.பி.துரை, என்.ரகு, கே.ஆர்.தாமோதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story