போளூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல்


போளூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 April 2019 4:00 AM IST (Updated: 6 April 2019 7:49 PM IST)
t-max-icont-min-icon

போளூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போளூர்,

போளூர் அல்லிநகரை சேர்ந்தவர் ஏழுமலை, மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் மீன் வாங்க மினிவேனில் வேலூர் நோக்கி சென்றார். ஆர்.குண்ணத்தூர் கூட்ரோட்டில் துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த மினிவேனை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது ஏழுமலையிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.90 ஆயிரத்து 100 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் நேற்று காலை 8.40 மணிக்கு வசூர் கூட்ரோட்டில் சிப்காட் தனி தாசில்தார் சுரேஷ் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது செங்கம் தாலுகா ஆலத்தூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் படவேடுக்கு நெல் வாங்க மினிவேனில் சென்றார். இந்த மினிவேனை அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர். அப்போது சிலம்பரசம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நேற்று காலை 11.30 மணியளவில் அதே பறக்கும் படையினர் செங்கம் சாலையில் வாகன சோதனை நடத்தினர். பேட்டை அருகே வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் இருந்த சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா ஏனாதி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர் மாடு வாங்க போளூரை அடுத்த கேளூரில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு செல்வதற்காக ரூ.72 ஆயிரத்து 800 வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கு அவரிடம் எந்தவித ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

3 இடங்களில் பறிமுதல் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 900–ஐ பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் தேர்தல் துணை தாசில்தார் மஞ்சுளா அந்த தொகையை போளூர் சார் கருவூலகத்தில் செலுத்தினார்.


Next Story