மாணவ - மாணவிகளுக்கு ரூ.90 லட்சம் கல்வி உதவித்தொகை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா வழங்கினார்


மாணவ - மாணவிகளுக்கு ரூ.90 லட்சம் கல்வி உதவித்தொகை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா வழங்கினார்
x
தினத்தந்தி 7 April 2019 3:30 AM IST (Updated: 6 April 2019 9:01 PM IST)
t-max-icont-min-icon

வி.ஐ.டி.யில் நடைபெற்ற பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா 2,142 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விளையாட்டு ஊக்கத்தொகையாக ரூ.90 லட்சம் வழங்கினார்.

வேலூர்,

வி.ஐ.டி.யில் பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு தின விழா அண்ணா அரங்கில் நடைபெற்றது. துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் வரவேற்று பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். துணைத்தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா கலந்துகொண்டு வி.ஐ.டி.யில் பயிலும் 2,142 மாணவ-மாணவிகளுக்கு ரூ.90 லட்சம் கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட பி.டெக் இறுதியாண்டு மாணவர் வி.சஞ்சய், முதுகலை பொறியியல் மாணவி வி.எஸ்.அமலா காவியா ஆகியோருக்கு வேந்தரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா பேசுகையில், ‘நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, தொழில்துறையை அடிப்படையாக கொண்டுள்ளது. தொழில்துறை உற்பத்தியை சார்ந்தது. உற்பத்திக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. செல்போன் வசதி மூலம் உலகில் உள்ள நிகழ்வு, தகவல் பரிமாற்றங்களை இருந்த இடத்தில் இருந்தே அறிய முடிகிறது. இது புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியாகும். வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டத்தக்கது’ என்றார்.

விழாவுக்கு வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வி.ஐ.டி.யில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்வியிலும் ஆராய்ச்சி பணிகளிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் இந்த ஆண்டு ரூ.16 கோடி வழங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் வி.ஐ.டி.யில் உணவு மற்றும் விடுதி வசதியுடன் இலவச கல்வி பயிலுவதற்கான ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 65 லட்சமும், வி.ஐ.டி. நுழைவுத்தேர்வில் ரேங்க் பெறுபவர்களுக்கு ரூ.3 கோடியே 81 லட்சமும், ஆராய்ச்சி பணியில் ஈடுபட ரூ.5 கோடியே 20 லட்சமும், மெரிட் உதவித்தொகையாக ரூ.90 லட்சமும், செமஸ்டர் பாட திட்டத்தின் படி வெளிநாடுகளுக்கு செல்ல ரூ.40 லட்சமும், விளையாட்டு ஊக்கத்தொகையாக ரூ.7 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியும், சுகாதாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தேசிய தலைவராக பொறுப்பு வகிக்கும் நான், நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் ஆண்டு மொத்த வருவாயில் கல்விக்காக 4 சதவீதம் அளவிற்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. இது போதாது. வர உள்ள புதிய அரசு குறைந்தது 6 சதவீத அளவிற்காவது கல்விக்கு நிதி ஒதுக்க வேண்டும். அந்த நிதி ஒதுக்கீட்டை ஆண்டு தோறும் 1 சதவீதம் உயர்த்த வேண்டும்.

மருத்துவ கல்வியை பொறுத்தமட்டில் நாட்டில் 60 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளது. இதற்கு 12 லட்சம் பேர் போட்டியிடும் நிலை உள்ளது. கேந்திரா வித்யாலயா பள்ளிகளில் 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளது. இதற்கு 30 லட்சம் பேர் போட்டியிடும் நிலை உள்ளது. எனவே மருத்துவ கல்வியிலும் கேந்திரா வித்யாலயா பள்ளிகளிலும் படிப்பதற்கான இடங்களை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வுகள் மையத்தின் இயக்குனரும் பேராசிரியருமான இ.நடராஜன் வி.ஐ.டி. நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்தியா பெண்ட்டரெட்டி, இணை துணைவேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர் கே.சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story