கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்


கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 7 April 2019 3:45 AM IST (Updated: 6 April 2019 9:55 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடலூர், 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,499 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பான இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் கட லூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைப்பதற்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறையின் உள்ளே வாக்குப்பதிவு எந்திரங்களை வைப்பதற்கு வசதியாக சிறு, சிறு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக அறைகளில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவு பகுதிகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story