வளநாடு அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


வளநாடு அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 April 2019 4:00 AM IST (Updated: 7 April 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

வளநாடு அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே கொடம்பறை கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்துக்கு பல மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 3 ஆழ்குழாய் கிணறுகள் இருந்தும் அவை பயன்பாடின்றி உள்ளன. இதன்காரணமாக இப்பகுதி பொதுமக்கள் தண்ணீருக்காக வளநாடு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆனால் அங்கும் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் சிரமத்துக்கு ஆளான பொதுமக்கள், இதுபற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றை சரிசெய்ய வாகனம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பொதுமக்களுக்கு தெரியாமலே, ஏதோ பெயரளவில் அதை சரிசெய்ததாக கூறப்படுகின்றது.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குடிநீர் சீராக வழங்கக்கோரி நேற்று காலை மணப்பாறை - பாலக்குறிச்சி சாலையில் வளநாடு கடைவீதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் மற்றும் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோமதி சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். 

Next Story