மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-07T02:33:05+05:30)

மத்தியில் தனிப்பெரும் பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குமரி மாவட்டத்தில் நேற்று வேன் மூலம் பிரசாரம் செய்தார். அப்போது அந்த வேனில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனும் உட்கார்ந்து இருந்தார்.

வேர்கிளம்பி சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது கூறியதாவது:-

நாங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைத்து உள்ளோம். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, எல்லோரும் டெல்லி சென்று தமிழகத்துக்கான வாய்ப்புகளை பெற்று தருவார்கள்.

இங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் மண்ணின் மைந்தர், எளிமையானவர், மக்களோடு மக்களாக வாழக்கூடியவர். திருமணம் ஆகாதவர். அவருக்கென்று குடும்பம் கிடையாது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மக்களே அவர் குடும்பம். குமரி மாவட்டத்துக்கு 40 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அவரை எதிர்த்து போட்டியிடுபவர் செல்வந்தர், மிக பெரிய வியாபாரி. நமக்கு தேவை, மக்களுக்காக, தொகுதிக்கு நல்லது செய்யக்கூடிய வேட்பாளர்தான். அதற்காகத்தான் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை எங்கள் கூட்டணி சார்பில் நிறுத்தி உள்ளோம்.

இந்த தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் ஆவது உறுதி என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால், அதை இரும்புகரம் கொண்டு அடக்குபவர் மோடி. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும், எந்த வளர்ச்சி திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து அதனை நிறைவேற்றி தந்துள்ளார்.

எனவே இந்த தேர்தலில் நாடு முழுவதும் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப் பெரும் பான்மையுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண்தங்கம், தே.மு.தி.க. செயலாளர் ஜெகநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அதன்பிறகு பிரேமலதா விஜயகாந்த் அஞ்சுகிராமம் வந்து, பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள், ‘கேப்டன் எப்படி இருக்கிறார்?‘ என்று கேட்டனர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த், ‘கேப்டன் சூப்பராக உள்ளார். அவர் வெகு விரைவில் உங்கள் முன் வருவார். 5 நிமிடம் முன் கூட அவருடன் செல்போனில் பேசினேன். அப்போது அடுத்து எங்கு செல்கிறாய் என்று கேட்டார். நான் அஞ்சுகிராமம் என்றதும், அனைவரையும் கேட்டதாக கூறும்படி சொன்னார்’ என்று பதில் அளித்தார்.

உடனே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு பிரேமலதா விஜயகாந்த் களக்காடுக்கு புறப்பட்டு சென்றார். பிரசாரத்தின் போது அ.தி.மு.க. மாநில மருத்துவ அணி செயலாளர் சி.என்.ராஜதுரை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story