பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி உறுதி


பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி உறுதி
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 6 April 2019 9:45 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி வாக்கு சேகரித்தார். அப்போது வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன் என்று அவர் உறுதி அளித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆ.மணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் பார் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். வேட்பாளர் திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனூர், கொட்டாவூர், நடூர், துரிஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், கும்பாரஅள்ளி, லூர்துபுரம், அஜ்ஜம்பட்டி, பையர்நத்தம், குறிஞ்சி நகர், விழுதுபட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் ஆ.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின்போது ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வேட்பாளர் ஓட்டு வேட்டை நடத்தினார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளர் ஆ.மணி பேசுகையில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், கிராமப்புறங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன் என்று உறுதி கூறினார்.

இந்த பிரசார நிகழ்ச்சிகளில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் டாக்டர் ஜெகநாதன், தொகுதி அமைப்பாளர் கோகுல், நிர்வாகிகள் பிரகாஷ், மதன்பாலாஜி, வட்டார காங்கிரஸ் தலைவர் பூபதி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வஞ்சு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாலையா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story