இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் பிருந்தாகாரத் பேச்சு


இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் பிருந்தாகாரத் பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 4:45 AM IST (Updated: 7 April 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தேசிய தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகம், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். இதேபோல், தமிழகத்தில் நடை பெறும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இதை வருகிற 18–ந் தேதி நீங்கள் செலுத்தும் வாக்கு மூலம் ஒரே கல்லில் 2 மாங்காய்களை வீழ்த்த முடியும். மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப முடியும்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை, வருத்தம், கோபத்தை தருகிறது. இந்த தவறான செயலால் பொள்ளாச்சியின் நற்பெயருக்கு அவர்கள் களங்கம் விளைவித்து விட்டனர். பாலியல் வன்கொடுமையில் பெண்கள், மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவத்தால் மிகுந்த வேதனையும், வெட்கமும் அடைகிறேன்.

இந்தியாவில் மோடி ஆட்சியில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 4 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக போலீசில் புகார் செய்த போது, அந்த பெண்ணின் பெயர், முகவரி, தெருப்பெயர் என வெளியிட போலீசாருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. இங்குள்ள துணை சபாநாயகர் ஜெயராமன் தனது பெயருக்கு முன்னால் பொள்ளாச்சி என போடுவதை நீக்கி விடுங்கள்.

ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்து இருந்தால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து தூக்கி எறிந்து இருப்பார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை மறந்து விட்டனர். கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மோடியா, லேடியா என சவால் விட்டு பிரசாரம் செய்தார். ஆனால், இன்று அ.தி.மு.க.வினர் மோடியை டாடி என கூறி பணிந்து விட்டனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சிறந்த வாக்குறுதி தந்து உள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சிறையில் தள்ளப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். மோடி, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பல வழக்குகளில் 80 சதவீத குற்றவாளிகள் தப்புவதற்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்தியா, பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆகும். அதை அழிக்க மோடி நினைக்கிறார். இதை நாம் தடுக்க வேண்டும். மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேசம் ஒன்று இருக்காது. ஒரே இந்தியாவாக இருக்க நாம் பா.ஜனதா, சங்பரிவாரை தோற்கடிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி.யால் லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் 37 எம்.பி.க்கள் தேர்வு செய்யப் பட்டனர். இவர்கள் மக்களுக்கு எதிராக பா.ஜ.க. செயல்பட்ட போது வாயில் பசை போட்டு ஒட்டியது போல் பிள்ளை பூச்சிகளாக இருந்தனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவது அவசியம். பொள்ளாச்சி தொகுதி தி.மு.க.வேட்பாளர் சண்முகசுந்தரத்தை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.


Next Story