ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் சாத்தியமே கே.எஸ்.அழகிரி உறுதி


ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் சாத்தியமே கே.எஸ்.அழகிரி உறுதி
x
தினத்தந்தி 6 April 2019 10:45 PM GMT (Updated: 6 April 2019 10:28 PM GMT)

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கான ரூ.72ஆயிரம் நிதிஉதவி வழங்கும் திட்டம் ஆண்டுக்கு ரூ.230லட்சம் கோடி வருமானம் உள்ள இந்தியாவில் சாத்தியம்தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பேசியதாவது:–

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மற்ற நாட்டினரும் வியந்து பாராட்டுகின்றனர். இந்தியாவில் உள்ள மாநில கட்சியினருக்கும் இந்த தேர்தல் அறிக்கை வியப்பினை அளித்துள்ளது. இத்தேர்தல் அறிக்கையில் ராகுல்காந்தி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 25 கோடி மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் அதாவது வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும் என்றுஎன்று தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3 1/2 லட்சம் கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எங்கிருந்து பணம் வரும் என்று பொருளாதார நிபுணர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள சிறந்த பொருளாதார வல்லுனர்கள் உலக அளவில் உள்ள பொருளாதார வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்த பின்னரே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதையை நிலையில் இந்தியாவின் ஆண்டுவருமானம் ரூ.230 லட்சம் கோடியாகும் அடுத்த ஐந்தாண்டுகளில் இது 400 லட்சம் கோடி ரூபாயாக உயரும் இந்நிலையில் ரூ.3 1/2 லட்சம் கோடி செலவு செய்வது என்பது சாத்தியமான ஒன்றுதான்.

1947–ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் 90 சதவீத ஏழைகள் இருந்தனர். கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று கேட்கிறார்கள். 60 ஆண்டுகளில் 70 சதவீதம் ஏழைகளை மீட்டெடுத்துள்ளோம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கருணாநிதி முதல்– அமைச்சராக இருந்த போதும் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோன்று ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிபொறுபேற்றவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

100 நாள் வேலைதிட்டத்தின் மூலம் ஒரு 80 வயது மூதாட்டிக்கும் கூட 100 ரூபாய்வருமானம் கிடைக்கச்செய்தது காங்கிரஸ் கட்சி. பெருந்தலைவர் காமராஜர் பிரதமர் நேரு நண்பராக இருந்து தமிழகத்தில் பல்வேறு அணைகளை கட்டினார். திட்டங்களை கொண்டு வந்தார். இங்கு போட்டியிடும் மாணிக்கம் தாகூரும் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் அவரை வெற்றிபெறச்செய்தால் உங்களுக்கான நலத்திட்டங்களை கொண்டுவருவார். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. விருதுநகர் எம்.எல்.ஏ.சீனிவாசன், ம.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கர், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் மாநில நிர்வாகிகள் நவீன், மகேந்திரன், திருச்சி வேலுச்சாமி, விருதுநகர் முன்னாள் நகரசபை துணை தலைவர் பாலகிருஷ்ணசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.


Next Story