கடந்த தேர்தலில் ரூ.108 கோடியாக இருந்த பா.ஜனதா எம்.பி.யின் சொத்து மதிப்பு இந்த தேர்தலில் ரூ.2¼ கோடி மட்டுமே


கடந்த தேர்தலில் ரூ.108 கோடியாக இருந்த பா.ஜனதா எம்.பி.யின் சொத்து மதிப்பு இந்த தேர்தலில் ரூ.2¼ கோடி மட்டுமே
x
தினத்தந்தி 6 April 2019 10:37 PM GMT (Updated: 2019-04-07T04:07:27+05:30)

ரூ.108 கோடியாக இருந்த சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2¼ கோடியாக குறைந்து விட்டதாக பா.ஜனதா எம்.பி. பூனம் மகாஜன் தனது வேட்பு மனுவில் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

வடமத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் பூனம் மகாஜன் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். இவர் மறைந்த மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் ஆவார்.

பூனம் மகாஜன் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனுவில், தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2¼ கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு ரூ.108 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கமாக அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு உயர்ந்து கொண்டே போகும் நிலையில் எம்.பி. ஒருவர் கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பை குறைத்து காண்பித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொழில் நஷ்டம்

பூனம் மகாஜன் தற்போது தனது கையிருப்பு ரூ.75 ஆயிரம், கணவரிடம் ரூ.29 ஆயிரத்து 650 இருப்பதாக கூறியுள்ளார். கடந்த தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2 ஆடி கார்கள் இருப்பதாக கூறியிருந்த அவர், தற்போது ரூ.11 லட்சம் மதிப்பிலான ஒரு ஹோண்டா கார் மட்டுமே இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனது கணவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்கிறார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தில் சொத்துகளை விற்று கடனை அடைத்து விட்டோம். தற்போது எங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசிகள் மட்டுமே உள்ளது’’ என்றார்.

Next Story