நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலால் நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தகூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தனித்து இயங்க கூடிய தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, நீதிமன்றம், சி.பி.ஐ. போன்றவற்றை சீர்குலைத்து பிரதமர் மோடி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார். அவருக்கு சாதகமான முடிவுகளை எடுக்க கூடிய ஆயுதங்களாக இந்த துறைகளை மாற்றி விட்டார். இதனால் இந்திய ஜனநாயகமே கேள்விக்குறியாகி விட்டது.
இதற்கு முடிவு கட்டும் முக்கிய தேர்தலாக தற்போதைய தேர்தல் உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு மோடிக்கு எவ்வாறு சாதகமான அலை வீசியதோ அதேபோன்று தற்போது அவருக்கு எதிரான அலை வீசுகிறது. இதன்காரணமாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
கடந்த தேர்தலின்போது பிரதமர் மோடி அள்ளிவீசிய வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் 35 ஆயிரம் போராட்டங்களை எதிர்கொண்டு ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த போராட்டங்களின் பின்னால் பல ஆயிரம் மக்கள் பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளில் ஒன்றை கூட இந்த அரசு தீர்க்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனை மம்தா உள்ளிட்ட யாருமே எதிர்க்கவில்லை. ஏனெனில் ராகுல் பிரதமராவதை கூட்டணி கட்சியினர் அனைவரும் விரும்புகின்றனர். இதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் முருகபூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.