ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களை தடுப்பவர்கள், அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களை தடுப்பவர்கள், அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குடிநீர், மின்விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும். வாக்காளர்களை வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க பெரிய பந்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள்.
தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 59 ஆயிரத்து 740 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் மூலம் அனைவருக்கும் பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை காட்டி வாக்களிக்கலாம்.
இந்த மாவட்டத்தில் 118 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். அதே போல 113 பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய 161 பேரை போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தடையின்றி அச்சமின்றி வாக்களிக்கலாம். சாதி, மத உணர்வுகளை மற்றும் வன்முறையை தூண்டக்கூடியவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். 36 பறக்கும் படை குழுவினர், 12 சிறப்பு கண்காணிப்பு குழுவினர், 10 வீடியோ கண்காணிப்பு குழுவினர், 5 தேர்தல் செலவு கணக்கு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 1950 என்ற எண்ணிற்கு இது வரை 3,294 புகார்கள் வந்துள்ளன.
தேர்தல் சிறப்பு செயலிக்கு 35 புகார்கள் வந்துள்ளன. இதுவரை ரூ.3 கோடியே 12 லட்சத்து 56 ஆயிரத்து 396 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் இடங்களில் இருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்னங்கள், விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய விவி பேடு எந்திரம் பற்றி 1635 இடங்களில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குச்சீட்டுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும். வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், அதனை வாங்குவதும் சட்டப்படி குற்றம். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுப்பதை தடுப்பதற்கு வருமானவரித்துறை சிறப்பு புலனாய்வு குழுவினரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வேட்பாளரும் ஜனநாயக முறைப்படி தொகுதியின் அனைத்து பகுதிக்கும் சென்று வாக்கு சேகரிக்க கடமையும், உரிமையும் உண்டு. பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களை தடுப்பவர்கள் மற்றும் அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை, உதவி அலுவலர் கயிலை செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.