காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் என்ன முட்டாளா? ‘மோடியின் மோசடிகளை மக்களிடம் எடுத்து கூறுவேன்’ ராஜ் தாக்கரே பரபரப்பு பேச்சு


காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் என்ன முட்டாளா? ‘மோடியின் மோசடிகளை மக்களிடம் எடுத்து கூறுவேன்’ ராஜ் தாக்கரே பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 4:10 AM IST (Updated: 7 April 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் மோசடிகளை மக்களிடம் எடுத்து கூற பொதுக்கூட்டம் நடத்துவதாக பேசிய ராஜ்தாக்கரே, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் என்ன முட்டாளா? என்று வினாவினார்.

மும்பை,

மராட்டியர்களின் புத்தாண்டு தினமான குடிபட்வாவை முன்னிட்டு மும்பை தாதர் சிவாஜிபார்க்கில் நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அக்கட்சி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்து உள்ள நிலையில், ராஜ்தாக்கரே யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜ்தாக்கரே பேசியதாவது:-

முட்டாளா?

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் மராட்டியத்தில் 10 பொதுக்கூட்டம் நடத்த உள்ளேன். கடந்த சில தினங்களாக செய்தி சேனல்கள், நாளிதழ்களில் நான் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக கூறிவருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் என்ன முட்டாளா?.

தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் அஜித்பவாரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினேன். அப்போது கூட்டணி தொடர்பாக நான் அவரிடம் பேசவில்லை. இது தொடர்பாக நான் அறிக்கையும் விடவில்லை. பின்னர் ஏன் தவறாக செய்தி வெளியிடுகிறார்கள்.

மோடியின் மோசடி

நாட்டு மக்களிடம் மோடியின் மோசடிகளை கூற தான் தற்போது பொதுக்கூட்டம் நடத்துகிறேன். கடந்த 5 வருடத்தில் மோடி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் ஆகும். இவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை பெயர் மாற்றி அறிவித்து உள்ளார்.

கங்கா நதி தூய்மை படுத்துவதை வலியுறுத்தி உத்தரபிரதேசத்தை சேர்ந்த அகர்வால் என்பவர் கடந்த 111 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதனை மோடி கண்டும் காணாதது போல் இருந்தார். ஆனால் அவர் உயிரிழந்த பின்னர் டுவிட்டர் மூலம் அஞ்சலி செலுத்தி உள்ளார். இதன்பின்னர் கங்கை நதி தூய்மை திட்டம் அறிவித்து உள்ளார். அவர் உயிரோடு இருக்கும் போது மோடி சந்தித்து இருந்தால் பலன் கிடைத்து இருக்கும்.

நேர்மையான ஆட்சி

டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் மூலம் ஒரு கிராமம் முழுவதும் டிஜிட்டலாக ஆக்கப்பட்டதாக அறிவித்து இருந்தார். இதனால் எனது கட்சி தொண்டர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் வெறும் பொய் என்பது தெளிவாக தெரியவந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின்னர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.33 கோடி கிடைத்து உள்ளது. இவை அனைத்தும் புதிதாக அச்சடிக்கப்பட்ட பணநோட்டுகள் ஆகும். இவை எல்லாம் எங்கிருந்து அவருக்கு கிடைத்தது.

நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். நேர்மையான அரசை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story