காளையார்கோவில் பகுதியில் பழமையான கல்வட்டம் பாதுகாக்க கோரிக்கை
காளையார்கோவில் பகுதியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வட்ட கற்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
காளையார்கோவிலை அடுத்த அ.வேளாங்குளம் பகுதியில் கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் பெருமளவில் இருப்பதை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் கா.காளிராசா, இலந்தக்கரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெமினி ரமேஷ் மற்றும் காளையார்கோவிலைச் சேர்ந்த தமிழ் கணினியம் முத்துக்குமார் ஆகியோர் காளையார்கோவிலை அடுத்த அ.வேலாங்குளம் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:– பொதுவாக கல்வட்டம் என்பது இறந்தவர்களை புதைத்த இடத்தில் சுற்றி வைக்கப்படுவது என்பதாகும். பழங்காலத்தில் இறந்தவர்களின் ஈமச்சின்னங்களை கற்களால் வடிவமைத்துள்ளனர். தனி ஒருவரால் தூக்க இயலாத பெருங்கற்களை கூட்டமாக சேர்ந்து வட்டவடிவில் அமைத்துள்ளனர்.
இதில் தலைக்கல் உயர்ந்ததாகவும் மற்றவை ஒரே அளவுடையதாகவும் உள்ளன. இவை 3 ஆயிரத்து 500 ஆண்டுகளிலிருந்து 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம். மேலும் இம்மாதிரியான ஈமச்சின்னங்கள் ஒரே மாதிரியாக காணக்கிடைப்பது வியப்பாக உள்ளது.
மேலும் இந்த பெருங்கற்கால ஈமச்சின்னத்தை மேலும் சிதைவுறாமல் பாதுகாக்க தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.