மராத்திய புத்தாண்டான ‘குடி பட்வா' உற்சாக கொண்டாட்டம்


மராத்திய புத்தாண்டான ‘குடி பட்வா உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 April 2019 4:15 AM IST (Updated: 7 April 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

‘குடி பட்வா' எனும் மராத்திய புத்தாண்டு மும்பையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மும்பை,

‘சைத்ரா’ என்ற மாதத்துடன் மராத்திய ஆண்டு தொடங்குகிறது. இதில் சைத்ரா மாதத்தின் முதல் நாள் ‘குடி பட்வா’ என்று அழைக்கப்படும். இந்த வருட பிறப்பினை மராத்தியர்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மராட்டிய புத்தாண்டு நேற்று பிறந்தது.

மராட்டிய புத்தாண்டான ‘குடி பட்வா’வையொட்டி மராத்தியர்கள் அதிகாலையில் எழுந்து தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பெரும்பாலான வீடுகளில் ‘குடி’(வெற்றிக்கொடி) என்றழைக்கப்படும் சிவப்பு மற்றும் பச்சை நிற பட்டு துணியினால் நெய்யப்பட்ட கொடிகள் மூங்கில் கம்புகளில் முகப்பு பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

பெண்கள் கலாசார நடனம்

அதுபோல வீடுகளின் முற்றத்தில் கண்ணை கவரும் வண்ண, வண்ண கலர்பொடிகளில் வித்தியாசமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. பெண்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் வீதிகளில் இசை வாத்தியங்களை முழக்கியபடி ஆரஞ்சு நிற கொடியுடன் மராத்திய பாடல்களை பாடியவாறும், கலாசார நடனமாடியவாறும் சுற்றி வந்தனர்.

இந்த கலாசார வீதி உலாவில் சிறுவர்கள் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி உள்பட பல்வேறு வேடமணிந்து குதிரைகளில் சென்றனர்.

மோட்டார் சைக்கிளில் பெண்கள்

பண்டைய கால பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் பெண்கள் குதிரை மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்தனர். இந்த கொண்டாட்டங்கள் மராட்டிய கலாசாரத்தை கண்முன் நிறுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வர்ஷா பங்களாவில் குடும்பத்தினருடன் மராத்திய புத்தாண்டை கொண்டாடினார். மும்பை தவிர தானே, புனேயிலும் மராத்திய புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

வாகனங்கள் வாங்கினர்

புத்தாண்டு தினத்தின்போது முதல் நாள் வசந்தமாக இருந்தால், அது வருடம் முழுவதும் தொடரும் என்று நம்பி பலர் வீடுகளுக்கு தேவையான டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் குவிந்தனர். பலர் புதிய வாகனங்களை வாங்கி மகிழ்ந்தனர்.

கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜையின் முடிவில் வேப்பிலைகள், பருப்பு, அச்சுவெல்லம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

Next Story