நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனையில் இதுவரை ரூ.5.91 கோடி பறிமுதல் கலெக்டர் ரோகிணி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த வாகன சோதனையில் இதுவரை ரூ.5.91 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் சேலத்தில் நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள், வருகிற 18–ந் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முதன் முதலாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம் அமைத்தல், வீல் சேர் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்து கொடுப்பது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டதாக ரூ.5 கோடியே 91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்களும், 4.31 கிலோ தங்கம், 97 கிலோ வெள்ளி மற்றும் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 293 பேர் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் சம்பந்தமாக 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 104 புகார்கள் வந்துள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தற்போது 2–ம் கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியானது மாவட்டத்தில் 11 இடங்களில் நடைபெறுகிறது. தபால் வாக்குகள் போட 11,532 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.