மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 பேர் மீது வழக்கு


மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 April 2019 4:15 AM IST (Updated: 7 April 2019 10:07 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10-ந் தேதி அறிவித்தது. அன்று முதல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. இதனையொட்டி அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் விளக்கப்பட்டது. இதனையொட்டி தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டது. அவர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நடத்தை விதிகள்படி அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் மூடப்பட்டன. கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் பதியப்பெற்று அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. விதிமீறல் தொடர்பாக போலீஸ் நிலையங்களுக்கு வரப்பெறும் புகார்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதை பின்பற்றாமல் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். மேலும் சுவரொட்டிகள் ஒட்டுவதும், கொடிக்கம்பங்களை அகற்றாமலும் இருந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் நாங்கள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும், தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தபோது தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டவர்கள் மீதும் வரப்பெற்ற புகார்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story