சிறுமி கடத்தி கற்பழிப்பு; ஓட்டல் ஊழியர் கைது


சிறுமி கடத்தி கற்பழிப்பு; ஓட்டல் ஊழியர் கைது
x
தினத்தந்தி 7 April 2019 10:45 PM GMT (Updated: 2019-04-07T22:10:55+05:30)

திருநின்றவூர் அருகே சிறுமியை கடத்தி கற்பழித்த ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆபத்தானபுரம் அடுத்த வடலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 26). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் தங்கி அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி அந்த சிறுமியை திருமண ஆசைவார்த்தை கூறி அரிகிருஷ்ணன் கடத்தி சென்றுவிட்டார். இதற்கிடையே சிறுமி மாயமானதால் அவரது தாயார் மகளை காணவில்லை என திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அரிகிருஷ்ணன், அந்த சிறுமியை திருநின்றவூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

தகவல் அறிந்த போலீசார் அரிகிருஷ்ணனை தேடினர். திருநின்றவூர் பஸ் நிலையம் அருகே ஊருக்கு தப்பிச்செல்ல முயன்ற அரிகிருஷ்ணனை போலீசார் பிடித்து திருநின்றவூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அரிகிருஷ்ணன் ஓட்டலில் வேலை செய்தபோது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமண ஆசைவார்த்தை கூறி சொந்த ஊருக்கு கடத்தி சென்றார். பின்னர் அங்கு தனியாக அறை எடுத்து தங்கி சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் செலவுக்கு கையில் பணம் இல்லாததாலும், அரிகிருஷ்ணனின் வீட்டார் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததாலும், சிறுமியை அவரது வீட்டின் அருகே விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருநின்றவூர் போலீசார் அரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story