தூர்வாரும் பணி தீவிரம்: அடையாறு பூங்கா நீர்நிலை 10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டது நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்பு


தூர்வாரும் பணி தீவிரம்: அடையாறு பூங்கா நீர்நிலை 10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டது நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்பு
x
தினத்தந்தி 8 April 2019 4:15 AM IST (Updated: 7 April 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

அடையாறு பூங்காவில் உள்ள நீர்நிலை 10 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு போனதை தொடர்ந்து தற்போது தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் நீலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது.

சென்னை,

சுற்றுப்புற சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் 358 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 58 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பகுதியில் ரூ.23 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டு கடந்த 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அடையாறு பூங்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட 172 வகை மூலிகை செடிகள், 91 வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள், அபூர்வ வகை பூச்சி இனங்கள், அங்குள்ள நீர் நிலைகளில் 27 வகை மீன் வகைகள், செயற்கை நீரூற்றுகள், பசுமைமாறா காடுகள், பல வகையான தாவர வகைகள் உள்ளன. பூங்காவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் நீர்நிலைகளாக உள்ளன.

இப்பூங்காவிற்கு பழந்தமிழ் நூல் இயற்றிய தமிழ்ப் புலவர் தொல்காப்பியரின் பெயரை அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி சூட்டி திறந்து வைத்தார். இங்குள்ள நீர்நிலையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் வெளிநாட்டு பறவைகளும் இங்கு வருகை தருகின்றன. சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை குறித்து அறிந்து கொள்வதற்காக பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த பூங்காவில் உள்ள நீர் நிலையில் தண்ணீர் இருப்பதால் எப்போதும் இங்கு அரிய வகை பறவைகள் வந்து செல்கின்றன. இந்தவகை பறவைகளில் பெரும்பாலானவை அழிவின் விளிம்பில் உள்ளன. தவளை, குருவி, மைனா, வண்ணத்துப்பூச்சி போன்ற வகை வகையான உயிரினங்களை இங்கு காணலாம். சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய அரிய வகை விலங்குகளும், பறவைகளும் இங்கு உள்ளன.

இப்பூங்காவை பார்வையிட செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் செவ்வாய், வியாழக் கிழமைகளில் பகல் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவில் உள்ள நீர் நிலையில் தண்ணீர் இருந்தால் பார்வையாளர்கள் ஆர்வம் உடன் வந்து கண்டு களிக்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர் களுக்கு ரூ.5-ம், பொதுமக்களுக்கு ரூ.20 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் பூங்காவில் உள்ள நீர் நிலை வறண்டு காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பூங்காவிற்கு அழகு சேர்ப்பது இங்குள்ள நீர் நிலை தான். இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு வறண்டு விட்டது. இதனால் தற்போது இந்த நீர் நிலையை தூர் வாரி வருகிறோம். வரும் பருவ மழைக்கு முன்பாக இதனை தூர் வாரி கொள்ளளவை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

நீர் நிலையில் தண்ணீர் அதிகமாக இருக்கும் போது வெளிநாட்டு பறவைகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது நீர் நிலை வறண்டு காணப் படுவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளை பார்க்க முடியவில்லை. இந்த நீர் நிலை வறண்டு போனால் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் மட்டம் மேலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story