மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்டத்தில் 7,892 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று அந்தந்த பகுதியில் நடந்தது.
நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1,720 பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு நாமக் கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சப்-கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
இதில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் ‘விவிபேட்’ எந்திரம் ஆகியவற்றை கையாள பயிற்சி கொடுக்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கையேடும் வழங்கப்பட்டது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆசிரியர்கள் வாக்களிக்க தேவையான படிவங்கள் வழங்கப்பட்டது. தபால் வாக்குகளை செலுத்த வசதியாக பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பரமத்தி வேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியிலும் நேற்று 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்்்்்்்னிக் கல்லூரியிலும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ராசிபுரம் எஸ்.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும் 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேந்தமங்கலத்தில் நடந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் மொத்தம் 7,892 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story