ராசிபுரத்தில் தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் அரசு ஊழியர்கள் தர்ணா


ராசிபுரத்தில் தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் அரசு ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 8 April 2019 3:15 AM IST (Updated: 7 April 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராசிபுரம், 

ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பு ராசிபுரம் சட்டமன்ற தேர்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சந்திரா, உதவி தேர்தல் அலுவலரும், ராசிபுரம் தாசில்தாருமான சாகுல் அமீது ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பை நாமக்கல் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் பகல் 1 மணியளவில் வாக்குப்பதிவு அலுவலர் 2 மற்றும் 3 நிலையை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டவர்கள் சென்றுவிட்டனர். வாக்குச்சாவடி அலுவலர், போலீங் ஆபீசர் என்ற பணிக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர். வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு ஈரோடு, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க 2 வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இவ்வாறு இருக்க பணியில் கலந்துகொண்டவர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு, தேர்தல் பணி சான்று அதிகாரிகள் வழங்கவில்லை என குற்றம் சாட்டி பயிற்சி மையத்திற்கு வெளியே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேர்தல் பணி சான்று, தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படும் என உதவி தேர்தல் அதிகாரி சாகுல் அமீது தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story