திருக்கோவிலூர் அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை தாய் திட்டியதால் விபரீத முடிவு


திருக்கோவிலூர் அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை தாய் திட்டியதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே தாய் திட்டியதால் பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் காலனியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் சிவசங்கரி(வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். சம்பவத்தன்று இவர் தனது தாயிடம் சாப்பிட உணவு கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவருடைய தாய், நீயே சென்று சாப்பாடு போட்டுக்கொள் என்று திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிவசங்கரி, அருகில் உள்ள தனது சித்தப்பா சரண்ராஜின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்ட உறவினர்கள் விரைந்து வந்து சிவசங்கரியை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவசங்கரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story