திருத்துறைப்பூண்டியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் அமைச்சர் காமராஜ் பிரசாரம்
திருத்துறைப்பூண்டியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.
கொரடாச்சேரி,
நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை.சரவணன் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ராயநல்லூர், விளக்குடி, மணலி உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல் ஆகியோருடன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:–
திருத்துறைப்பூண்டி ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அலைச்சலின்றி பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திருத்துறைப்பூண்டியில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டது.
ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பில் 30 படுக்கை வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. திருத்துறைப்பூண்டி நகரில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். திருத்துறைப்பூண்டி வழியாக செல்லும் முக்கிய ஆறுகள் தூர்வாரப்படும்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இதனை கருத்தில் கொண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாகை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தாழை.சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.