பொம்மிடியில் வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் பறிமுதல் பழைய தர்மபுரியில் 325 துண்டுகள் சிக்கியது
பொம்மிடியில் வாகன சோதனையில் ரூ.80 ஆயிரமும், பழைய தர்மபுரியில் 325 துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பொம்மிடி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பொம்மிடி அருகே உள்ள முத்தம்பட்டி பிரிவு ரோட்டில் பறக்கும் படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். வேனில் வந்த வேப்பிலை மேட்டூரை சேர்ந்த விவசாயி ஜடையன் என்பவர் ரூ.80 ஆயிரத்தை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பழைய தர்மபுரியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சி துண்டுகள் 325 இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரில் வந்த காரிமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 325 துண்டுகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சரக்கு வாகனம், காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.80 ஆயிரம், 325 துண்டுகளை பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story