சூதாட்ட தகராறில் பயங்கரம்: இரும்பு கம்பியால் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் கொலை நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பெங்களூரு,
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் அருகே வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 33). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் யுகாதி பண்டிகை என்பதால், தனது நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷ் மதுஅருந்தியதாக தெரிகிறது. பின்னர் ஒசகெரேஹள்ளியில் தனது நண்பர்களுடன் பணம் வைத்து ரமேஷ் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கும், நண்பர்களுக்கும் இடையே திடீெரன தகராறு உண்டானது.
தகராறு முற்றவே திடீரென்று ஆத்திரமடைந்த நண்பர்கள், ரமேசை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். பின்னர் ஒசகெரேஹள்ளியில் உள்ள மதுபான கடைக்கு பின்புறம் ரமேஷ் உடலை வீசிவிட்டு, அவரது நண்பர்கள் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று காலையில் மதுபான கடைக்கு பின்பாக ரமேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பது பற்றி அறிந்ததும் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் ரமேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது குடிபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷ் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சூதாட்டத்தில் ரமேசுக்கு ஏராளமான பணம் கிடைத்ததும், சூதாடவில்லை என்றும், வீட்டுக்கு செல்ல போவதாகவும் நண்பர்களுடன் கூறியதாக தெரிகிறது. ஆனால் தொடர்ந்து சூதாட வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது குடிபோதையில் இருந்த நண்பர்கள், ரமேசை இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது உடலை மதுபான கடைக்கு பின்புறமாக வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேசின் நண்பர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story