மண்டியா காங்கிரஸ் நிர்வாகிகளுடனான சித்தராமையாவின் சமரச பேச்சு தோல்வி
முதல்-மந்திரி குமாரசாமி மகனுக்கு ஆதரவாக பணியாற்ற மறுப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ள மண்டியா காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து சித்தராமையா நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் இந்த சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால் மைசூரு, மண்டியா ஆகிய 2 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர் களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் கர்நாடகத்தில் 2 கட்டங்களாக வருகிற 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது.
வருகிற 18-ந் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில், மண்டியா, பெங்களூரு உள்பட 14 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் 21 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. குறிப்பாக காங்கிரஸ் சமபலத்துடன் திகழும் மண்டியா, ஹாசன் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) போட்டியிடுகிறது.
ஆனால் அந்த தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதுடன், கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மண்டியா தொகுதியில் முதல்-மந்திரி மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக சுயேச்சையாக நடிகை சுமலதா களமிறங்கியுள்ளார்.
அந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவை ஆதரிப்பதாக மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சுமலதாவுக்கு பா.ஜனதாவும் ஆதரவு வழங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தாலும்கூட மண்டியா காங்கிரசார் அதை கேட்க தயாராக இல்லை.
இதனால் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமிக்கு ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. மண்டியாவில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக தேவேகவுடாவும், சுயேச்சை வேட்பாளரை மண்டியா காங்கிரசார் ஆதரிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமியும் பகிரங்கமாகவே அறிவித்தனர்.
இது காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வரை சென்றுள்ளது. மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மண்டியா பிரச்சினையை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும், கூட்டணி தர்மத்தை பின்பற்றும்படி உத்தரவிட வேண்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையாவிடம் கூறினார்.
இதையடுத்து மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து சமரச முயற்சி மேற்கொள்ள சித்தராமையா முடிவு செய்தார். அதன்படி நேற்று சித்தராமையா பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செலுவராயசாமி, நரேந்திரசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “மண்டியாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். டெண்டர்களை ரத்து செய்து, ஜனதா தளம்(எஸ்) கட்சியினருக்கு வழங்கியுள்ளனர். எங்களை மதிப்பதே இல்லை. காங்கிரசாரை பழிவாங்கும் வகையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் செயல்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடியும்” என்றனர்.
அதற்கு சித்தராமையா, “தேசிய நலன், கட்சியின் நலன் அடிப்படையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக செயலாற்ற வேண்டும்.
ஒருவேளை நீங்கள் கட்சி முடிவுக்கு எதிராக செயல்பட்டால், உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் எல்லோரும் ஒற்றுமையாக கூட்டணி கட்சியின் வெற்றிக்கு பாடுபடுங்கள்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அதற்கு மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக ஒப்புக்கொள்ளாமல் இறுதிவரை தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதனால் சித்தராமையாவின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செலுவராயசாமி நிருபர்களிடம் கூறுகையில், “மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக செயல்படும்படி எங்கள் தலைவர் சித்தராமையா உத்தரவிட்டார். எங்களின் கஷ்டங்களை எடுத்துக்கூறினோம். கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்று சொன்னார். நாங்கள் உறுதியும் அளிக்கவில்லை.
மண்டியாவுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசி, அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மண்டியா தவிர மற்ற பகுதிகளில் கூட்டணி தர்மத்தை பின்பற்றி வருகிறது. மண்டியாவை விட்டுவிடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அதை நாங்கள் நேசிக்கும் தலைவர்களின் ஆசியாக கருதுவோம். இனி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறாது. அதற்கு நேரமும் இல்லை. தலைவர்கள் பிரசாரம் செய்ய செல்கிறார்கள்” என்றார்.
மண்டியா தொகுதியை பொறுத்தவரையில் கூட்டணி கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு அந்த தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றே சொல்லப்படுகிறது.
மண்டியாவில் காங்கிரசார் பணியாற்றாவிட்டால், மைசூருவில் காங்கிரசுக்கு ஆதரவாக நாங்கள் பணியாற்ற மாட்டோம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் மண்டியா, மைசூரு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரால் இரு தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story