தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பா.ஜனதா மீதான பொய்யான பிரசாரத்தை முறியடிப்பேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பா.ஜனதா மீதான பொய்யான பிரசாரத்தை முறியடிப்பேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 8 April 2019 3:30 AM IST (Updated: 8 April 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பா.ஜனதா மீதான பொய்யான பிரசாரத்தை முறியடிப்பேன் என்று பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலையில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு வந்தார். அங்கு மீன்கடைக்காரர்களிடம் மீன், நண்டு உள்ளிட்டவைகளை வாங்கினார். தொடர்ந்து அங்கு இருந்த தொழிலாளர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் சூழ்நிலை நன்றாக உள்ளது. பா.ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளராகிய நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். கனிமொழி போன்றவர்கள் மறுபடியும், மறுபடியும் தவறான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளனர். எங்கே இந்தி திணிக்கப்படுகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிறார். நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அவர்கள் தான் அதற்கு காரணம். தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு சாதகமாக தி.மு.க.வினர் நடந்து கொள்கிறார்கள். இதனை ஏழை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று மோடி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார்கள். நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிகவளாகம் கட்டப்படுகிறது. அதே போன்று தூத்துக்குடியிலும் வணிக வளாகம் கட்டுவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருவேன். வளர்ச்சியை நோக்கி தூத்துக்குடி சென்று கொண்டு இருக்கும் போது, வேண்டுமென்றே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு தொடர்ந்து அதனை கூறி தூத்துக்குடியின் வளர்ச்சியை தடுப்பதாகவே கருதுகிறேன். தூத்துக்குடிக்கு எந்த விதத்திலும் வளர்ச்சி வந்து விடக்கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டு ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே குறிப்பிட்டு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில பொய்யான விமர்சனங்களை வைத்து உள்ளார்கள்.

எங்களை பொறுத்தவரை சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த தொழிற்சாலைகளுக்கும் நாங்கள் ஆதரவாக இல்லை. தூத்துக்குடியில் நடந்த போராட்டம் மற்றும் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் மிகவும் துரதிஷ்டவசமானது. ஆனால் இதில் எந்தவிதத்திலும் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லாத போது, பா.ஜனதாவை தொடர்புபடுத்தி பொய்யான பிரசாரத்தை மேற்கொள்வது தவறானது. அதனை நான் முறியடிப்பேன். இவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருப்பது தூத்துக்குடியின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பேசிக் கொண்டு இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். கனிமொழி இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர் தத்தெடுத்த கிராமத்தை கூட வளர்ச்சியடைந்த கிராமமாக மாற்றவில்லை. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இரட்டை ரெயில்பாதை நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆகையால் தூத்துக்குடியை வளர்ச்சியடைந்த தூத்துக்குடியாக மாற்றுவதற்கு இவர்கள் தடையாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று, தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நவ திருப்பதி கோவில்கள், நவ கைலாச கோவில்கள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் போன்றவை உள்ளது. உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். எனினும் போதிய மேம்பாட்டு வசதிகள் இங்கு செய்யவில்லை.

இந்த திருவிழாவை வட இந்திய தலைவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். தூத்துக்குடி தொகுதியில் பா.ஜனதா வெற்றிபெறும்போது, அனைத்து வட இந்திய தலைவர்களும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வருவதாக கூறி உள்ளனர். இந்த கோவிலை மத்திய அரசு புண்ணிய தலமாக அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யும்போது, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெறும்‘ என்றார்.

அவருடன் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story