ஓடும் ரெயிலில் துணிகரம் பெண் வக்கீல் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டிய திருடன் கைது 33 வழக்குகளில் தொடர்புடையவர்
ஓடும் ரெயிலில் கழுத்தில் அரிவாளை வைத்து பெண் வக்கீலிடம் செல்போன் பறிக்க முயன்ற திருடனை போலீசார் கைது செய்தனர். இவர்மீது 33 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
மும்பை,
மும்பையை சேர்ந்தவர் சானியா மிர்சா(வயது24). வக்கீல். சம்பவத்தன்று வேலை விஷயமாக கோரேகாவ் சென்று விட்டு தனது தோழியுடன் சர்ச்கேட் செல்லும் மின்சார ரெயிலில் இரவு 11 மணி அளவில் வந்து கொண்டு இருந்தார். பிரபாதேவி ரெயில் நிலையம் வந்தவுடன் உடன் இருந்த தோழி இறங்கி சென்றுவிட்டார். அப்போது பெட்டியில் சானியா மிர்சா தனியாக இருந்தார். ரெயில் புறப்பட்டபோது ஓடி வந்து ஒரு வாலிபர் அந்த பெட்டியில் ஏறினார்.
பின்னர் திடீரென அந்த வாலிபர் தான் வைத்திருந்த அரிவாளை சானியா மிர்சா கழுத்தில் வைத்து அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றார். இதனால் பயந்துபோன அவர் அலறினார்.
அப்போது ரெயில் லோயர் பரேல் ரெயில் நிலையம் வந்தது. இதனால் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்று விட்டார். சம்பவம் குறித்து சானியா மிர்சா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த வாலிபரின் அடையாளம் தெளிவாக பதிவாகியிருந்தது. மேலும் அவரது பெயர் ஆகாஷ் (வயது28) என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருந்து ஷீரடிக்கு பாதயாத்திரை சென்ற கூட்டத்தில் ஆகாஷ் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது 33 குற்றவழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story