சந்திராப்பூரில் புலி தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி


சந்திராப்பூரில் புலி தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 April 2019 3:15 AM IST (Updated: 8 April 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

சந்திராப்பூரில் புலி தாக்கி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

நாக்பூர்,

சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு பிரம்மபுரி வனப்பகுதியில் நேற்று முன்தினம் அனுசயா பங்கர் (வயது 60) என்ற பெண் இலுப்பை பூ பறிக்க சென்றிருந்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த புலி ஒன்று அந்த பெண் மீது பாய்ந்து கடித்து குதறியது. மேலும் அவரை வாயில் கவ்வி இழுத்து சென்றது. அவருடன் சென்றிருந்த மற்ற பெண்கள் இந்த கோர காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் காட்டில் இருந்து பதறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சிதைந்து கிடந்த அனுசயா பங்கரின் உடலை கைப்பற்றி கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் சவர்கதா வனப்பகுதிக்குள் நேற்று முன்தினம் இலுப்பை பூ பறிப்பதற்காக சென்ற பாஜிராவர் சோனுலே (63) என்ற தொழிலாளியையும் புலி கடித்து கொன்றது.

கடந்த சில தினங்களுக்கு முன் ராம்பூரி கிராமத்தை சேர்ந்த ஜான்கியாம் பாலவி என்பவரும் இலுப்பை பூ பறிக்க காட்டுக்குள் சென்றபோது புலி தாக்கி பலியாகியுள்ளார்.

சந்திராப்பூர் பகுதியில் இந்த ஆண்டில் இதுவரை புலி தாக்கி 9 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story