திருமானூர் மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


திருமானூர் மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 7 April 2019 7:57 PM GMT)

திருமானூர் மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நேற்று 53-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பெண்கள், குழந்தைகள், பக்தர்கள் வேண்டிக்கொண்டு பால்குடம், காவடி, தீச்சட்டி மற்றும் நாக்கு, கன்னம் மற்றும் உடல் ஆகியவற்றில் அலகு குத்திக்கொண்டு மேள தாள வாத்தியங்களுடன் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தனர். இதில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு காலில் தண்ணீரை ஊற்றி வழிபாடு செய்தனர். இவ்வழிபாட்டில் கவனிக்கத்தக்க வகையில் சிலர் அங்கப்பிரதட்சனம் செய்து கொண்டே ஊரை சுற்றி வந்தனர்.

குழந்தை பாக்கியம் வேண்டும் என வேண்டி இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததை அடுத்து கரும்பில் சேலையை கட்டி தொட்டில் செய்து அதில் குழந்தையை படுக்க வைத்து ஊர் முழுவதும் சுற்றி வந்து அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இன்னும் சிலர் உடல் மற்றும் கன்னங்களில் அலகுகளை குத்திக்கொண்டு ஆகாயத்தில் தொங்கிய நிலையிலேயே விமான காவடி எடுத்து வந்தனர். கோவிலில் பக்தர்களுக்கு வெயில் கால பிரசாதமாக மோர் மற்றும் கூழ் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story