ஊட்டியில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி சிலுவையை சுமந்து சென்றனர்


ஊட்டியில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி சிலுவையை சுமந்து சென்றனர்
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 8 April 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி நடைபெற்றது. அவர்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிலுவையை சுமந்து சென்றனர்.

ஊட்டி,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இந்த நாட்களை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 6–ந் தேதி தொடங்கியது. தவக்காலத்தில் இறைச்சி உணவுகளை தவிர்ப்பதுடன், உபவாசமும் இருந்து வருகிறார்கள்.

தவக்காலத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்கள், ரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் பல்வேறு திருச்சபைகளில் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. தவக்காலத்தில் 5–வது ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவர்களின் பரிகார பவனி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதேபோல் நேற்று ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்பில், தவக்கால பரிகார பவனி ஊட்டியில் நடைபெற்றது.

ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து பவனி தொடங்கியது. இதில் இயேசு கிறிஸ்து வேடமணிந்த ஒருவர் சிலுவையை சுமந்தபடி சென்றார். மேலும் பலர் சிலுவையை சுமந்தபடி சென்றார்கள். பரிகார பவனி கலெக்டர் அலுவலக சாலை, ஸ்டேட் வங்கி, அரசு ஆஸ்பத்திரி சாலை, கூட்ஷெட், ரோகிணி சந்திப்பு, காந்தல் முக்கோணம் வழியாக குருசடி திருத்தலத்தை அடைந்தது. பவனியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாடல்களை பாடியும், ஜெபம் செய்தும், இயேசுவின் துன்பகரமான பாடுகளை தியானித்த படியும் சென்றனர்.

இதையடுத்து காந்தல் குருசடி திருத்தலத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெற்றது. இதில் குருசடி திருத்தல பங்கு தந்தை அமிர்தராஜ், பல்வேறு ஆலயங்களின் பங்கு தந்தைகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஊட்டியில் நடந்த கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனியில், இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் 500 கிலோ எடை கொண்ட சிலுவையை சுமந்து சென்றனர். இந்த சிலுவை ஆங்கிலேயர் காலத்தில் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த சிலுவையை பவனியின் போது, கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து மாற்றி, மாற்றி சுமந்து சென்றார்கள்.


Next Story